Enquire Now
நோய் விளக்கம்

 பல்வேறு நாற்றங்கால் நோய்களில், ஈர அழுகல் நோயானது மிகவும் பரவலாகக் காணப்படுவதோடு, அதிக சேதாரத்தையும் ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இது பல நோய்களின் தொகுப்பை குறிக்கக்கூடியது. இதனை முளைப்புக்கு முந்திய ஈர அழுகல் நோய் மற்றும் முளைப்புக்கு பிந்திய ஈர அழுகல் நோய் என நோய் தாக்கும் நிலைகளுக்கு ஏற்றவாறு வகைப்படுத்தலாம். இந்த நோய் ஏற்பட பித்தியம், பைட்டோப்தோரா, பியூ சேரியம் மற்றும் ரைசோக்டோனியா போன்ற பூஞ்சைகள் காரணமாக உள்ளன. இவற்றில் கடைசியாக குறிப்பிடப்பட்ட பூஞ்சைகள் நம் நாட்டின் வன நாற்றங்கால்களில் பரவலாக காணப்படுகின்றன.


முன்பே தீர்மானிக்கப்பட்ட காரணிகள்

 இந்த நோய் ஏற்படுவதை முன் கூட்டியே தீர்மானிக்கும் காரணிகளாக அதிக மண் வெப்பம், அதிக மண் ஈரப்பதம், அதிக மண்காரத்தன்மை, அதிக நைட்ரஜன் அளவு, குறைந்த ஒளி, வடிகால் வசதி குறைந்த களிமண், மற்றும் அடர்த்தியான விதைநடவு ஆகியவற்றை குறிப்பிடலாம். அடர்த்தியான நிழல் மற்றும் அளவுக்கு அதிகமான நீர்தெளிப்பு ஆகியன நோய் வளர்ச்சிக்கு பெரிதும் ஊக்கமளிக்கின்றன.


பாதிக்கப்படும் மர இனங்கள்

 வேம்பு, வேல், வாகை, சவுக்கு, தைலம், குமிழ், மலைவேம்பு, கடம்பம், சந்தனம், பெருமரம் மற்றும் மூங்கில் முதலியன.


நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்கள்
 பித்தியம், பைட்டோப்தோரா, பியூசேரியம் மற்றும் ரைசோக்டோனியா.

நோய்க்குறிகள்

1. குறைவான விதை முளைப்பு விகிதம்

2. முளைத்த பின் செடிவாடல் மற்றும் விழுந்துவிடல்

3. விதை முளைத்த இருவாரங்களுக்குள் அறிகுறிகள் தோன்றும். முதல் ஜோடி இலைகள் தோன்றுகையில் 60%  இறப்பு ஏற்படும்.

4. நாற்றங்கால் பாத்திகளில், இந்த நோய் ஒழுங்கற்ற வகையில் பகுதி, பகுதியாக தோன்றும், பின் வேகமாக பக்கவாட்டில் பரவும்.

5. நீர்தேங்கி, தரைமட்டத்தில் அழுகத் தொடங்கும். பாதிக்கப்பட்ட பகுதி பழுப்பு நிறத்துக்கு மாறி செல் பகுதிகள் சேதமடைவதால் நிலைகுலைந்து விழுந்து இறந்துவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்


அ) நோய்க்கிருமிகள் வளர்ச்சியை தடுப்பதோடு, பயிர்ச்செடி வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் சாகுபடி முறைகளை கையாளுதல்.

ஆ)பார்மலின் மற்றும் பொருத்தமான பூஞ்சைக் கொல்லிகளை மண்ணில் கலந்தோ, கரைத்து ஊற்றியோ பயன்படுத்தலாம். பாவிஸ்டின் பூஞ்சைக் கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்வதும் பயன்தரும்.

இ) நாற்று வளரும் ஊடகத்தை நல்ல வெயிலில் உலர்த்தி, பயன்படுத்த வேண்டும்.

ஈ)நாற்றங்கால் பாத்திகளில் நீர் தேங்காமலும், அதிக அளவு நீர் தெளிக்காமலும் பராமரிக்க வேண்டும்.

உ) நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.

ஊ) நாற்றங்காலில் நல்ல காற்றோட்டம், மற்றும் சூரிய வெளிச்சம் கிடைக்கும்படி உறுதி செய்ய வேண்டும்.

எ) டிரைகோடெர்மா, சூடோமோனஸ் வேம் மற்றும் எக்டோ மைக்கோரைசல் உயிரி கலவைகளையும், உயிரி கட்டுப்பாடு முறைகளையும் பயன்படுத்தி, செடிவளர்க்கும் கலவையை தயாரித்து, பிறகு விதைகளை ஊன்றலாம்.